மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என  தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Feb 20, 2025 - 15:03
 0
மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த  இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன், தன்னுடைய மனைவி ஜமூனாவிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர் திவ்யா, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோர் பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டதையடுத்து, ஜமுனாவை ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்ததில், ஜமுனா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக கடந்த 2019 ம் ஆண்டு   தினந்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கை விசாரித்த  மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பிரசவத்தின் போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும்  பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் எல்லா நேரங்களில் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசின் பொது சுகாதார துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும், உள்ள பொது சுகாதர துறையின் இணை இயக்குனர்கள் கள ஆய்வு மேற்கொள்ளவும், அவசர நேரத்தில் பயன்படுத்தும் வகையில் அருகில் இருக்கும் இரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கிடையே108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow