BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை… முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி, அண்ணாமலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jul 5, 2024 - 22:19
Jul 8, 2024 - 13:06
 0
BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை… முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி, அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு அருகிலேயே இந்த கொலை சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டதோடு, ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மர்ம நபர்கள் வெட்டியதும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஆம்ஸ்ட்ராங்கை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலும் பதட்டமான சூழல் காணப்படுகிறது.  ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

6 பேர் கொண்ட கும்பல் பைக்கில் சென்று கொலை செய்துவிட்டு தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் அவர்கள் உணவு டெலிவரி செய்ய வருவதை போல சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளையும் கத்தி ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திலும் ராஜீவ்காந்தி மருத்துவமனை பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல் உதவி ஆணையர் பிரவீன்குமார், செம்பியம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் குறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதிக்கும் தொண்டர்களுக்கும் மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது டிவிட்டரில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். நம் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பார்க்க யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மருத்துவமனை நிர்வாகம் அனுமதி கொடுக்காமல் யாரும் பார்க்க முடியாது என்பதால், தொடர்ந்து பதற்றமான சூழல் காணப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow