இந்தியா வந்தடைந்த டி20 சாம்பியன்ஸ்... கேக் வெட்டி, ஆட்டம் போட்ட ரோஹித் ஷர்மா!
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தது.
டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. ஜூன் 29ம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற பைனலில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே ஆகியோரின் பொறுப்பாக ஆடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இந்தத் தொடர் முழுவதும் சொதப்பி வந்த கோலி, 76 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி, ஒருகட்டத்தில் எளிதாக வெற்றிப் பெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவர்களின் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீச, தென்னாப்பிரிக்க வீரர்கள் களத்தில் செய்வதறியாது திகைத்து நின்றனர். பும்ராவின் பவுலிங், சூர்யகுமார் யாதவ் பிடித்த சூப்பர் மேன் கேட்ச் ஆகியவை இந்திய அணியின் சாம்பியன் கனவை நனவாக்கியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. முக்கியமாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு பெற ஒருநாள் மட்டுமே இருந்த நிலையில், கடைசியாக டி20 உலகக் கோப்பை வெல்ல காரணமாக அமைந்தார்.
அதேபோல், கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஒட்டுமொத்த இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கோப்பையுடன் இந்தியா திரும்பும் வீரர்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பார்படாஸில் புயல், மழை காரணமாக விமானங்கள் இயக்க முடியாமல் போனது. இதனால், இந்திய வீரர்கள் தயாகம் திரும்ப முடியாமல் வெஸ்ட் இண்டீஸிலேயே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு தனி விமானம் மூலம் இந்திய வீரர்கள் பார்படாஸில் இருந்து டெல்லி புறப்பட்டனர். அதன்படி இன்று காலை இந்தியா வந்தடைந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை வடிவிலான கேக் வெட்டி, ஆட்டம் போட மற்ற வீரர்களும் உற்சாகத்தில் திளைத்தனர். இதனையடுத்து பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லம் சென்றனர் இந்திய வீரர்கள். முன்னதாக விமானத்தில் வரும் போதும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையுடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட வீடியோக்கள் வைரலாகின. அதேபோல், தற்போது ரோஹித் ஷர்மா கேக் வெட்டி டான்ஸ் ஆடியதும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
What's Your Reaction?