‘கலைஞர் நினைவு நாணயம்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்..
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகக் கருணாநிதியின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி, திரைத்துறை சார்பில் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி எனப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நினைவு நாணயம்’ வெளியிட ஒன்றிய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23ஆம் தேதி கடிதம் எழுதினார். இந்த நாணயத்தை, கடந்த ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 100வது பிறந்தநாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. நாணயத்திற்கான நடைமுறைகள் மற்றும் பணிகள் சொன்ன நேரத்திற்குள் முடியாமல் போனதால் நாணயத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நாணயத்திற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து நினைவு நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து மத்திய அரசின் கெஜட்டிலும் நாணயம் அச்சடிக்க உத்தரவிடப்பட்டது. நாணயம் வெளியிடுவதற்கான அணைத்து பணிகளும் அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) மாலை 07.00 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ‘கலைஞர் நினைவு நாணயம்’ வெளியிடப்பட்டது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நிணைவு நாணயத்தை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவினை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நாணயத்தின் சிறப்புகள்:
கருணாநிதி நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகா தூண், ‘சத்யமேவ ஜெயதே’, ‘பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு, அதற்கு கீழே அவர் பயன்படுத்திய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் கருணாநிதியின் நூற்றாண்டு (1924 - 2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருக்கும்.
35 கிராம் எடை கொண்ட இந்த ரூ. 100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு ரூ. 2,500 விலையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
What's Your Reaction?