TVK Maanadu: விஜய்யின் என்ட்ரி முதல் மேடை பேச்சு வரை... தவெக மாநாடு முழு விவரம் இதோ!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் என்ட்ரி முதல் அவரது மேடை பேச்சு வரையிலான முழு விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம்: தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை மறுதினம், அக்.27ம் தேதி விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இதற்கான ஏற்பாடுகள், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. இதில் மாநாடு நடைபெறும் அன்று, தவெக தலைவர் விஜய் கட்சி கொடி ஏற்றவுள்ளார். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய், நாளை (அக்.26) விக்கிரவாண்டி புறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தவெக மாநாடு 27ம் தேதி மாலை 4 மணிக்கு துவங்கும் எனவும், தலைவர் விஜய் சுமார் 5 மணி அளவில் மாநாட்டு பந்தலுக்கு வருகை தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில், தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றும் விஜய், அதன் பின்னர் மாநாட்டு பந்தலுக்கு செல்கிறார். தொடர்ந்து மேடையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள நடை மேடையில், தொண்டர்களை நோக்கி Ramp Walk சென்று அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க பிளான் செய்யப்பட்டுள்ளதாம். அதன் பின்னர் மாநாட்டு பந்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள் என, கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரையும் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார் விஜய்.
இதன் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகளில் 5 முதல் 8 பேர் வரை மாநாட்டு மேடையில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள வாகை மலர், போர் யானைகள், கொடி வடிவமைப்பு ஆகியவற்றுக்கான விளக்கங்களுடன், தனது கட்சியின் கொள்கையையும் விதிகளையும் வெளியிட இருக்கிறாராம் விஜய். அதன்பின்னர் மேடையில் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை விஜய் பேசவுள்ளதாகவும், அப்போது பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஊழல், அரசியல் கலாச்சாரம், நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், மக்களை பிளவுபடுத்தும் சாதிய மத அரசியல் பற்றியும், மக்கள் நலனுக்கு எதிராக கொண்டுவரப்படும் திட்டங்கள் குறித்தும், மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றியும் விஜய் பேசவிருப்பதாக தெரிகிறது. அதேபோல், மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கவும் தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே மாநாட்டுத் திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் கட் அவுட்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் குறித்தும் பேச உள்ளார் விஜய்.
இதுமட்டுமின்றி தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்லும் விஜய், இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலும் அரசியல் சார்ந்த குட்டிக்கதையை பேசுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும் நான்கு மணிக்குள் மாநாட்டு திடலுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. கடந்த கால அரசியல் மாநாட்டில் உணவுப் பொருட்கள் வீணானதை தடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அழைத்து வரக்கூடிய நிர்வாகிகளே தொண்டர்களுக்கு தனித்தனியே உணவை ஏற்பாடு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
What's Your Reaction?