மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட சட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்!
ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 1994-ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநில அரசு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமானது குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு பிறகு தற்போது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது ஆந்திராவில் பிறப்பு விகிதம் குறைந்து வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
ஆந்திர உள்ளிட்ட தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் இதனால் மக்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவையில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய மசோதாக்கள் முன்மொழியப்பட்டது. இந்த மசோதாவானது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-2021-ன் படி, ஆந்திரப்பிரதேசத்தில் 15 முதல் 49 வயதினருக்கிடையே உள்ள பெண்களுக்கு மொத்த கருவுருத்தல் வீதம் 1.7 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2015-2016 ஆம் ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 0.2 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
22 சதவீத பெண்களும், 26 சதவீத ஆண்களும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இரண்டு வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளில் பிறப்பு விகிதம் 1.47 சதவீதத்திற்கும் கிராமப்புற பகுதிகளில் 1.78 சதவீதத்திற்கும் கீழே பிறப்பு விகிதம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?