அம்பானி வீட்டுத் திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால், பாதி உலகமே தலைகீழாக மாறிவிடும் என பதிவிட்ட இளைஞரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியில் எரிசக்தி வணிகத்தை நிர்வகித்து வருகிறார். இவர் நீடா அம்பானியுடன் இணைந்து ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான மும்பை இண்டியன்ஸ் அணியையும் வழிநடத்தி வருகிறார்.
ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபரான வீரேன் மெர்ச்செண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சி, மும்பையில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமா பிரபலங்கள், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் கலந்துகொண்டார். இதில், ரஜினிகாந்த் மணமகன் ஆனந்த் அம்பானியோடு இணைந்து, ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ஜாலியாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
மேலும், முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவாவுடன் கலந்துகொண்டார். கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் பங்கேற்றார். மேலும், கே.எல்.ராகுல், முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே, சூர்யகுமார் யாதவ் யுவேந்திர சாஹல் ஆகீயோர் கலந்துகொண்டனர்.
முக்கியமாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் அதிகாரி லிண்டி கேமரூன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் ஜான்சீனா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாடகி ஆஷா போஷ்லே ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவில் மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மணமகன் ஆனந்த் அம்பானி ரூ.2 கோடி மதிப்புடைய உயர்ரக வாட்ச்சுகளை பரிசளித்துள்ளார்.
இந்நிலையில் அம்பானி வீட்டுத் திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால், பாதி உலகமே தலைகீழாக மாறிவிடும் என நினைப்பதாக வைரல் ஷா என்ற நபர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மும்பை குற்றப்பிரிவு போலீசார், குஜராத்தின் வதோதராவில் வைத்து வைரல் ஷாவை கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், "இதுபோன்ற செய்தி புரளியாக கருதப்பட்டாலும், சமூக ஊடகங்களில் போடுப்படும் பதிவுகளை கண்காணிக்கும் குழு நிச்சயமாக அதைக் கவனித்துக் கொள்ளும்" என்று கூறியுள்ளது.