தமிழ்நாடு

வீடியோ வெளியிட்டதால் காவலர் பணிநீக்கம்.. அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து

மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ வெளியிட்டதால் காவலர் பணிநீக்கம்.. அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து
உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஈடுகட்டும் விடுப்பு கோரி வீடியோ வெளியிட்ட காவலரை நிரந்த பணி நீக்கம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் தன்னை பணியிலிருந்து நீக்கிய, உத்தரவை ரத்து செய்து தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் கடந்த 2021ஆம் ஆண்டு 25ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பணிக்கு வந்தார் இதை கேட்ட காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் விடுமுறை நாட்களில் வேலை பார்த்ததற்கு ஈடுகட்டு விடுப்பு கோரி ஆய்வாளரிடம் விவாதம் செய்துள்ளார்.

மேலும் ஈடுகட்டு விடுப்பு கோரி முதல்வருக்கு கோரிக்கை வைத்து வீடியோவும் வெளியேற்றுள்ளார். இதனால் அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில், மனுதாரருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இன்றி விடுப்பு எடுத்தது, அதனை நீட்டித்தது. காவல் விதிகளுக்கு முரணாக தாடி வைத்தது உள்ளிட்டவைக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, காவலரை பணியில் இருந்து நீக்கி தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தார். காவலர் விதிமுறை மீறி வீடியோ வெளியிட்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்குவது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியது என்றும் நீதிபதி விக்டோரியா கெளரி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உத்தரவில், விடுப்பு கோரி காவலர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காவலரின் விதிமீறிய செயல்களுக்கு அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

மனுதாரர் ஆயுதப்படையில் பணியாற்றியவர் என்பதால் அவரிடமிருந்து அதிகபட்ச ஒழுக்கமும் நேர்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரை பணியில் இருந்து நீக்கியது அதிர்ச்சி அளிக்கிறது.

மனுதாரரின் இள வயதை கருத்தில் கொண்டு அவரை பணியில் இருந்து நீக்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மதுரை ஆயுதப்படை பிரிவின் உதவி ஆணையர் மனுதாரருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

ஏற்கனவே இந்த காவலர், தாடி வைத்திருந்தார் என்பதற்காக 3 வருட ஊதிய உயர்வை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது.   அதனைத் தொடர்ந்து இவரை பணி நீக்கவும் செய்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவலர் வழக்கு தொடர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கில், தமிழக காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடையில்லை. அவர்கள் நேர்த்தியாக தாடி வைத்து கொள்ள அனுமதி உண்டு. இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம் என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.