தமிழ்நாடு

Roja: செல்ஃபி எடுக்க முயன்ற தூய்மை பணியாளர்கள்... சைலண்டாக ஆர்டர் போட்ட ரோஜா... வைரலாகும் வீடியோ!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த ரோஜாவுடன் அங்கிருந்த தூய்மை பணியாளர்களை செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது நடந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

Roja: செல்ஃபி எடுக்க முயன்ற தூய்மை பணியாளர்கள்... சைலண்டாக ஆர்டர் போட்ட ரோஜா... வைரலாகும் வீடியோ!
Actress Roja

திருச்செந்தூர்: செம்பருத்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. செல்வமணி இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்த இத்திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரத் தொடங்கிய ரோஜா, அடுத்தடுத்து ஹிட் கொடுத்து அசரடித்தார். இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன் என 90ஸ் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகள் கிடைத்தன.

அதேபோல், தெலுங்கிலும் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ரோஜா, 2002ம் ஆண்டு இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். செம்பருத்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே இருவருக்கும் காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. 2015க்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதில் இருந்து முழுவதுமாக விலகிய ரோஜா, முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். காங்கிரஸ், தெலுங்கு தேசம் என கட்சி விட்டு கட்சி மாறிய ரோஜா, இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.  

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரோஜா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, தனது கணவர் செல்வமணியுடன் சாமி தரிசனத்துக்கு சென்றுள்ளார் ரோஜா. அப்போது அவருடன் அங்கிருந்த பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல், கோயில் வளாகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களும் ரோஜாவுடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் அவரை நெருங்கினர்.

ஆனால், அவர்கள் தூய்மை பணியாளர்கள் என்பதால், அருகில் வரவேண்டாம், கொஞ்சம் இடைவெளி விட்டு நிற்கும்படியாக சைகை காட்டியுள்ளார் ரோஜா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்கான பிரதிநிதியாகவும் ஒரு அமைச்சராகவும் பணியாற்றியவர் ரோஜா. அவரே இதுபோன்று நடந்துகொள்ளலாமா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுமக்களையும் மற்றவர்களையும் அருகில் நின்று செல்ஃபி எடுக்க அனுமதித்த ரோஜாவுக்கு, தூய்மை பணியாளர்கள் மட்டும் என்ன வேண்டாதவர்களாக ஆகிவிட்டார்களாக எனவும் விமர்சித்து வருகின்றனர். 

திருச்செந்தூர் கோயிலில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து ரோஜா தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் வரவில்லை. அதேபோல், ரோஜா அருகே அவரது கணவர் செல்வமணியும் நின்றுகொண்டிருந்தார். அவரும் ரோஜாவின் இந்த செயலை கண்டிக்காதது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.