விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்.. தொடர் போராட்டத்தில் மக்கள்!
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக 633 ஏக்கர் கையகப்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்த நிலையில் விமான நிலையம் அருகே உள்ள பரம்புபட்டி, சின்ன உடைப்பு உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் 280 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கடந்த 2009-ஆம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்து அதற்கான பணிகளை செய்து வந்தனர். இதையடுத்து 2009-ஆம் ஆண்டு அப்போதைய நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தற்போது ஊருக்கு வெளியே விமான நிலைய சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அறிந்த மக்கள் கடந்த 2009- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட நிதியை நடப்பாண்டு மதிப்பீட்டில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் வீடுகளை இழந்த தங்களுக்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்து குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்றும் அதுவரை தங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், நில எடுப்பு தாசில்தார் உள்ளிட்டோர் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் மேற்கொள்ள வந்தனர். அப்போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் கையில் பெட்ரோல் கேன்களுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நின்று தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்ததால் அப்பகுதி பரபரப்பானது. கிராம மக்களிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்றும் தங்களது குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அரசு தங்களுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி நிலம் மற்றும் வீடு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றும் தெரிவித்தனர்.
What's Your Reaction?