தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.
தமிழர்கள் தங்களது கலாச்சார, பண்பாட்டு விழாவாக. பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்து நன்றி தெரிவிக்கும் விழாவாக உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அறுவடை திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று உழவர்கள் தமது உழைப்பிற்கும், தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல லட்சம் மக்கள் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். அதிலும் தங்களது சொந்த வாகனங்களிலும் அரசு பேருந்து தனியார் பேருந்துகளிலும் மற்றும் ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
ஆனாலும், பொதுமக்கள் தங்களது பயணத்தை முறையாக, திட்டமிட்டால் ஒழிய, இனிமையாக அமையவேண்டிய பயணம், கொடூரப் பயணமாக மாறிவிடுகிறது. குடும்பத்தினருடன் செல்வோர்கள், குறிப்பாக குழந்தைகளுடன் செல்வோர்கள் முறையாக திட்டமிடததால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடைசி நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்லவேண்டி உள்ளது.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளின் கொண்டாடப்பட உள்ளது. இதனையத்து, பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து ரயில்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் வரும் 12ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.
பயணிகளின் வசதிக்காகவும் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே துவங்குகிறது. அதன்படி ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்றும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்வோர் நாளையும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்வோர் நாளை மறுநாளும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
மேலும் ஜனவரி 13-ஆம் தேதி போகிப் பண்டிகை என்று பயணம் செய்ய விரும்புவோர் இம்மாதம் 15ஆம் தேதியும் முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்க்காக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொலைதூரப் பயணம் மேற்கொள்வதற்காக பொதுமக்கள் இன்று காலை முதலே பயணிகள் அதிகளவில் குவிந்தனர். காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்க இருந்த நிலையில் முன்பதிவுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
What's Your Reaction?