சினிமா

ரஜினிகாந்த் கொடுத்த முத்தத்தை விட சுகமானது.. தம்பி ராமையா நெகிழ்ச்சி..

Actor Thambi Ramaiah : என் குழந்தைகள் எனக்கு இட்ட முத்தங்களை விட, என் மனைவி கொடுத்த முத்தங்களை விட, கண்ணாடியை பார்த்து எனக்கு நானே கொடுத்த முத்தத்தில் கிடைத்த சுகம் வேறு எதிலும் கிடைத்ததில்லை என்று நடிகர் தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கொடுத்த முத்தத்தை விட சுகமானது.. தம்பி ராமையா நெகிழ்ச்சி..
தம்பி ராமையா மற்றும் ரஜினிகாந்த்

Actor Thambi Ramaiah : நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குனர், பாடலாசியர், வசனகர்த்தா என பல துறைகளிலும் அசத்தி வருபவர் தம்பி ராமையா. தனது கடின உழைப்பாளும், அயராத முயற்சியாலும் திரைத்துறையில் வெற்றிகண்டவர் தம்பி ராமையா. சினிமா கனவுடன் சென்னைக்கு வந்த தம்பி ராமையா, 9 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

பின்பு, தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில், தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்தார். பின்னர், டி.ராஜேந்தர், பி.வாசு உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர், 2000ஆம் ஆண்டு மனுநீதி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுதமானார். பின்பு, வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தையும் இயக்குயுள்ளார். பல திரைப்படங்களில் குணசித்திர நடிகராக அசத்தி வருகிறார்.

இந்நிலையில், புதுக்கோட்டை அருகே உள்ள திருவரங்குளம் தனியார் வேளாண் அறிவியல் கல்லூரி 7ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இயக்குனருமான தம்பி ராமையா பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் தம்பி ராமையா. என்னையே எனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருக்கு என்னை பிடிக்கும். ஒவ்வொருவரும் தங்களை தாங்களே காதலித்துக் கொள்ள வேண்டும். என்னைப் பார்த்து யாரும் காதல் செய்கிறேன் என்று சொல்லவில்லை. என்னை நானே காதலித்தேன். என்னை நானே மெருகேற்றிக் கொண்டு, நானே எனக்கு முத்தமிட்டு கொண்டேன்.

தாய் கொடுத்த முத்தத்தை விட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த முத்தத்தை விட, என் குழந்தைகள் எனக்கு இட்ட முத்தங்களை விட, என் மனைவி கொடுத்த முத்தங்களை விட, கண்ணாடியை பார்த்து எனக்கு நானே கொடுத்த முத்தத்தில் கிடைத்த சுகம் வேறு எதிலும் கிடைத்ததில்லை.

இதே போன்ற ஒவ்வொரு மாணவரும் தங்களை காதலிக்க வேண்டும். அப்போதுதான் நல்லது கெட்டது தெரியவரும். வாழ்க்கை என்பது கண்ணாடி மாதிரி சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழுகும் அதுதான் வாழ்க்கை. மாணவர்கள் செல்போனில் செலவிடும் நேரத்தை தவிர்த்து, தினமும் படிக்க வேண்டும், ஒரு நாளைக்கு அரை பக்கமாவது எழுத வேண்டும். தவறைக் கூட சரியாக செய்ய வேண்டும், எதற்காகவும் அஞ்ச கூடாது. இப்படி செயல்பட்டால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.