டெல்லி: தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு என்று தனி இடம் உண்டு. 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதி, தனது ஆட்சிக்காலத்தில்இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்தவர். அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு தமிழ்நாடு கடிதம் எழுதி இருந்தது. அதன்படி கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில், கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். இதையொட்டி கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கருணாநிதி எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களால் பலமுறை தேந்தெடுக்கப்பட்ட கருணாநிதி ஒரு அரசியல் தலைவராக, முதலமைச்சராக இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். இந்திய அரசியலிலும், இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக விளங்கியவர் கருணாநிதி.
2047ம் ஆண்டு இந்திய வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக கருணாநிதியின் சிந்தனைகள் உதவும். இந்த நாளில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதிக்கு எனது இதயப்பூர்வமான மரியாதை செலுத்துகிறேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதற்காக பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய அன்பான வாழ்த்துகளும், ஆதரவும் வழங்கிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.