ஓவர் டோஸ்.. தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 8, 2024 - 21:24
Jul 9, 2024 - 10:56
 0
ஓவர் டோஸ்.. தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
82 Goats Died Due To Wrong Treatment in Villupuram

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் வளர்த்த ஆடுகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால்,  அவனிப்பூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கிருந்த கால்நடை டாக்டர் மணிகண்டன், பழனி என்பவரை பார்க்கும்படி கூறினார்.

பழனி என்பவர் ஆடுகளுக்கு ஊசிப் போட்டு சிகிச்சை அளித்தார். அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக 82 ஆடுகள் இறந்து விட்டன. உடனே டாக்டர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தேன். அவர் பண்ணைக்கு வந்து இறந்த ஆடுகளை பரிசோதித்து விட்டு, ஆடுகளுக்கு பழனி ‘ஓவர் டோஸ்’ ஊசி போட்டு விட்டதாக கூறினார்.

அதன் பின்னர் தான், பழனி என்பவர் கால்நடை டாக்டர் இல்லை. டாக்டரின் உதவியாளர் என்று தெரியவந்தது. இதையடுத்து சாரல் கால்நடை ஆஸ்பத்திரி டாக்டரை அணுகினேன். அவர் பண்ணைக்கு வந்து, இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, தவறான சிகிச்சையால் தான் ஆடுகள் இறந்துள்ளது என்று சான்றிதழ் கொடுத்தார்.

எனவே, டாக்டர் மணிகண்டன், அவரது உதவியாளர் பழனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், 82 ஆடுகள் பலியானதுக்கு இழப்பீடு கேட்டும் அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை மனு மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திண்டிவனம் கால்நடை உதவி இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் ஆடுகள் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.என்.சுப்பிரமணி ஆஜராகி மருத்துவர்கள் உதவியாளரின் தவறான சிகிச்சையால் தான் ஆடுகள் இறந்துள்ளது வாதிட்டார். 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மனுதாரருக்கும், கால்நடை உதவி இயக்குநர், கால்நடை டாக்டர் மணிகண்டன், உதவியாளர் பழனி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நடத்த வேண்டும்.

பின்னர், 82 ஆடுகள் இறந்ததற்கான இழப்பீடு வழங்குவது குறித்து தகுந்த உத்தரவை ஆட்சியர் பிறப்பிக்க வேண்டும். அதேபோல, கால்நடை டாக்டர், உதவியாளர் ஆகியோர் மீது உதவி கால்நடை இயக்குனர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 12 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow