டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Jan 30, 2025 - 18:50
 0
டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்
அண்ணாமலை-கிஷன் ரெட்டி

மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, கடந்த நவம்பர் 7-ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  

இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது. தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதுமட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக-வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்த நிலையில், டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

இதன்பின்னர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜனவரி 23-ஆம் தேதி அறிவித்தது. இதனை தொடர்ந்து டங்ஸ்டன் கனிம ஏல அறிவிப்பை ரத்து செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்து கிராம மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. 

 மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அழகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அரிட்டாபட்டி சென்றனர். அப்போது மதுரை கடச்சனேந்தல் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மேளதாளங்கள் முழங்க மத்திய அமைச்சருக்கும், தமிழக பாஜக மாநில தலைவருக்கும் மாலை அணிவித்து மலர்கள் தூவி  குறிப்பாக அந்தப் பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த  காய்கறிகளுடன்  சீர்வரிசை கொண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருந்தனர்.

சுமார் இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் அங்கு வந்த அமைச்சர் மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சீர்வரிசைகளை வாங்காமல் நிர்வாகிகள் வழங்கிய மாலையை அணிவிக்காமல் கார்மீது வைத்தும் தொண்டர்கள் வழங்கிய சால்வையை சீர்வரிசை கொண்டு வந்த பெண்களின் மீது தூக்கி எரிந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow