தவெக மாவட்ட செயலாளருக்கு தடபுடல் வரவேற்பு.. கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Jan 30, 2025 - 18:29
 0
தவெக மாவட்ட செயலாளருக்கு தடபுடல் வரவேற்பு.. கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்
தவெக மாவட்ட செயலாளருக்கு வரவேற்பளித்த தொண்டர்கள்

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய் அதற்கான முன்னெடுப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.  சமீபத்தில்  பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. 

இதில்,  கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவ விஜய் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, தனது சமூக வலைதளத்தில் மாவட்ட செயலாளர்கள் குறித்த பட்டியலை பகிர்ந்திருந்தார். 

இந்த நிலையில், விஜயினால் புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டனர். இதனால், போக்குவரத்து மிகுந்த காஞ்சிபுரம் காந்தி சாலையில் புதிய மாவட்ட செயலாளர்  எஸ்.பி.கே.தென்னரசுக்கு அக்கட்சியினர் தவில், நாதஸ்வர வாத்தியங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க நடனமாடி வரவேற்பளித்தனர்.

மேலும் படிக்க: 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் தவெக.. மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்?

முதலில் அச்சாலையிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர்,  டாடா ஏஸ் வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்தபடி குறுகிய சாலையான  பழைய இரயில்வே நிலைய சாலை வழியாக பேரணியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்க நுழைவு வாயிலுள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும், கங்கை கொண்டான் மண்டபம் பகுதியிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், தவெக தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 250 கிலோ மலர்களானது ஜேசிபி மூலம் எஸ்.பி.கே.தென்னரசு மீது கொட்டப்பட்டு மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பேரணி சென்ற சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow