2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் தவெக.. மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்த பின் மாவட்ட செயலாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சி மூலம் புதிதாக களமிறங்கி இருக்கிறார் விஜய். எந்த கூட்டணியும் இன்றி தனித்து நிற்கும் தமிழக வெற்றிக் கழகம் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் விஜய்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தார். மேலும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கைகள் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமூக வலைதள அரசியல் செய்து வருவதாகவும், சினிமா போன்று அரசியலையும் நினைத்துவிட்டார் என்றும் பல கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய் களத்தில் இறங்கி மக்களுக்கு ஆதரவாக போராடும் வரை அவருடைய அரசியல் முழுமை பெறாது என்று பலரும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 20-ஆம் தேதி பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்தார். மேலும், மக்களை பாதிக்கும் விமான நிலைய திட்டத்தை கைவிடும் படி மத்திய, மாநில அரசை வலியுறுத்தினார்.
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய் அதற்கான முன்னெடுப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதாவது, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்த பின் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மத்திய சென்னை, தென் சென்னை, திண்டுக்கல், அரியலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
What's Your Reaction?