இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்ட விவகாரம்.. இருவர் அதிரடி கைது
சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் சேலத்தில் வசித்து வந்தார். கணவருக்கு வெளியூரில் வேலை கிடைத்தால் அந்த இளம்பெண் சென்னை மாநகரத்தில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கி கொள்ள முடிவு செய்து கடந்த 3-ஆம் தேதி சேலத்தில் இருந்து பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார்.
இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து இறங்கிய அந்த பெண் அங்கிருந்து மாதவரம் செல்லும் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் மாதவரம் செல்ல வேண்டும் என கூறிய உடன் ஆட்டோ ஓட்டுநர் குறுக்கிட்டு இரவு நேரம் என்பதால் பேருந்து கிடைக்காது என்று கூறியதுடன் மாதவரத்தில் விட ஆயிரம் ரூபாய் கேட்டதாக தெரிகிறது.
அதற்கு அந்த பெண் ஒத்துக்கொள்ளாத போதிலும் 500 ரூபாய் கொடுத்தால் போதும் என கூறிய ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் பெண் பயணம் செய்த ஆட்டோவில் ஏற்கனவே ஆட்டோ ஒட்டுநரின் நண்பர்கள் இருவர் இருந்தாக தெரிகிறது.
பின்னர் ஆட்டோ ஓட்டுநர், மாங்காடு பைபாஸ் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திய போது பயந்து போன அந்த பெண் எதற்காக இங்கு ஆட்டோவை நிறுத்துகிறீர்கள் என கேட்ட உடன் ஏற்கனவே ஆட்டோவில் இருந்த இருவர் அந்த பெண்ணை ஆயுதங்களை காட்டி மிரட்டியதுடன் ஆட்டோ ஓட்டுநருடன் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
உடனே அந்த பெண் கூச்சலிட முயன்றபோது அந்த கும்பல் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அந்த பெண் செய்வதறியாது அமைதியாக இருந்துள்ளார். இதற்கிடையே ஆட்டோ ஓட்டுநர் தனது செல்போனில் இருந்து நண்பர்கள் இருவரை தொடர்பு கொண்டு இளம்பெண் பற்றி தகவல்களை தெரிவித்து அவர்களை இங்கு வருமாறு அழைத்தாக தெரிகிறது.
உடனே அந்த நபர்கள் பெண்ணை அழைத்து கொண்டு மதுரவாயல் வருமாறு கூறியதன் பேரில் மாங்காட்டில் இருந்து மதுரவாயலுக்கு அந்த பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் கோயம்பேடு மாதா கோவில் அருகே ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அந்த பெண் கூச்சலிட்டதால் பயந்து போன கும்பல் அவரை அழைத்து வந்து மதுரவாயல் பைபாஸ் சாலையில் வேறொரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ஆட்டோவில் ஏறிய பெண் அழுத்து கொண்டே தனது தோழியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணின் தோழியிடம் மதுரவாயல் அருகே உள்ள தனியார் கல்லூரி வாசலில் நிற்பதாகவும் அங்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துடன் ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் குற்றவாளிகள் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கடத்தல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து ஆட்டோவில் இளம் பெண்ணை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் இளம்பெண்ணை கடத்தி சென்ற வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ் செல்வன், சரித்திர பதிவேடு குற்றவாளியான தயாளன் ஆகிய இருவரை கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?