வேலு நாச்சியார் பிறந்த நாள்.. எங்கள் கொள்கைத் தலைவி.. விஜய் பெருமிதம்
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி அவரதி திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற இக்கட்சியின் முதல் மாநாடு பெரிய அளவில் பேசப்பட்டது. அதில், திமுக-வை விஜய் மறைமுகமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே திமுக- தவெக தொண்டர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தவெக தலைவர் விஜய் சமூக வலைதள அரசியல் செய்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். அதாவது, விஜய், பிரச்சனை என்று வரும் பொழுது களத்தில் இறங்கி மக்களை சந்திக்காமல் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் அறிக்கை மூலமாக தனது கண்டனங்களை தெரிவிப்பதாக பலர் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது.
மேலும், விஜய் இரண்டு முறை மட்டுமே களத்தில் இறங்கி மக்களை சந்தித்துள்ளதாகவும் பல கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்தனர். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் நேரில் சந்தித்தார். தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
What's Your Reaction?