ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு.. ரூ.400 கோடி மோசடி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சீன ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலி மூலம் 400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து சென்னை பொறியாளர் உட்பட நான்கு பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

கொல்கத்தா வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சென்னை பொறியாளரை கடந்த ஜூலை 17ஆம் தேதி விசாரணைக்காக அமலாக்கத்துறை அழைத்துச் சென்றது. வீடு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஜோசப் ஸ்டாலின் தொடர்பாக கடந்த மாதம் 17ஆம் தேதி ஆவடியில் உள்ள வீடு மற்றும் திருவேற்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பாக ஜோசப் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சென்னை ஆவடியில் தங்கி வந்துள்ளார். திருவேற்காட்டில் வாடகை எடுத்து அலுவலகம் வைத்து ஆன்லைன் டிரேடிங் தொழில் செய்து வந்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜோசப் ஸ்டாலின் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருவதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இந்நிலையில், அதில் சுமார் 75 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்திருப்பதும் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கபப்ட்டது.
இந்த பணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜோசப் ஸ்டாலின் கொல்கத்தா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் முதலீடு செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்த காரணத்தினால் ஜோசப் ஸ்டாலினை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சென்னை பொறியாளர் சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. 400 கோடி ரூபாய் சீன ஆன்லைன் செயலி மூலம் மோசடி செய்த விவகாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை பொறியாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட நான்கு பேரை, அமலாக்கத் துறையினர் கைது செய்தது தெரியவந்தது.
குறிப்பாக அருண் சாகு, அலோக் சாகு, சேட்டன் பிரகாஷ், ஜோசப் ஸ்டாலின் இந்த நான்கு பேரும் Fiewin செயலி மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தாவில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விளையாட்டுச் செயலிகள் மூலமாக ஆன்லைனில் விளையாடும் நபர்களின் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து வந்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் 400 கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருக்கிற காரணத்தினால் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை நடத்தியது.
இந்த மோசடி செய்யப்பட்ட பணத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி எட்டு சீனர்கள் கிரிப்டோ வாலட்டில் பரிவர்த்தனை செய்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த செயலிகள் அனைத்தும் சீனாவில் இருந்து இயக்கப்படுவது ஐபி முகவரி மூலமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறிப்பாக இந்த மோசடியை அரங்கேற்றும் சீனர்கள் telegram உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியாவில் உள்ள நபர்களை தொடர்பு கொண்டு மோசடியை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக தனியாக சமூக வலைதள குழுக்களை ஆரம்பித்து இந்தியாவில் பலரிடம் ஆன்லைன் விளையாட்டு செயலிகள் மற்றும் சூதாட்ட செயலி மூலமாக பணத்தை மோசடி செய்து, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்துள்ளனர். அமலாக்க துறையினர் இந்த நான்கு பேரையும் கைது செய்து கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் இந்த தகவல்கள் வெளியானதாக தெரிய வந்துள்ளது.
இந்தியர்களை பயன்படுத்தி செயலி மூலமாக இந்தியாவில் உள்ள நபர்களிடம் சீனர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாகவும் அவர்களது வங்கி பரிவர்த்தனை மூலம் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அருண் சாகு மற்றும் அலோக் சாகு ஆகிய இருவர் வைத்திருக்கும் நிறுவனங்கள் ரூர்கேலா மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் இருந்து செயல்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த சேட்டன் பிரகாஷ் இந்திய ரூபாய்களை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஜோசப் ஸ்டாலின் மென்பொருள் மேம்பாட்டாளராக சென்னையில் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
குறிப்பாக பை பென்ஜின் என்ற சீனரோடு, ஸ்டுடியோ 21 என்ற பெயரில் செயல்படும் நிறுவனத்தில் இணை இயக்குனராக சேர்த்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் பெருமளவு கோடிக்கணக்கான ரூபாயை நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த செயலிகளை செயல்படுத்த தேவையான பணத்தை சீனர்கள் ஜோசப் ஸ்டாலின் கிரிப்டோ கரன்சி வாலட்டில் கிரிப்டோ கரன்சிகளாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பியது தெரியவந்துள்ளது. இந்த கிரிப்டோ கரன்சிகளை இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலிகளை நடத்தி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?






