சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்!

''ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் அப்பா பெயரில் நூறு ரூபாய் நாணயம் வெளியீடு என்ற உடன் பாஜகவுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறீர்கள். இவ்வளவுதான் உங்கள் கோபமா?'' என்று திமுகவை சீமான் சாடினார்.

Aug 18, 2024 - 15:55
 0
சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்!
Seeman And Vijay

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ''நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி சேருவீர்களா?'' என்று செய்தியாளர்கள் கேட்டனர். 

இதற்கு பதில் அளித்த சீமான், ''தம்பி விஜய் செப்டம்பர் மாதம் கட்சி பணிகளை ஆரம்பிக்கிறார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அந்த நேரத்தில்தான் பார்க்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். கூட்டணி குறித்து தேர்தலின்போது பார்ப்போம். இப்போது அதுகுறித்து பேசி பயனில்லை'' என்றார்.

நாம் தமிழர் கட்சியினர் தன் மீது அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திருச்சி போலீஸ் எஸ்.பி. வருண்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ''தவறான போலி கணக்குகளை உருவாக்கி அதில் அவர்களே திட்டிக் கொள்கிறார்கள். என் கட்சியை சேர்ந்தவருக்கு இது வேலை கிடையாது. இது போன்ற செயல்களில் ஈடுபட்ட எனது கட்சியை சேர்ந்தவரை நான் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறேன். 

துரைமுருகனை நான் இரண்டு முறை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறேன். கட்சியில் தளபதியாக இருந்த துரைமுருகனுக்கு அந்த நிலை என்றால் கட்சியில் வேறு யாரும் அவதூறு பரப்பினால் வெளியே போ என்று சொல்லி விடுவேன். நீங்கள் என் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சகித்துக் கொண்டு வருகிறோம். வழக்குகளை பார்த்து பயப்பட மாட்டேன். நிறைய வழக்குகளை பார்த்து விட்டேன்'' என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பது குறித்தும், இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்காதது குறித்தும் செய்தியாளர்கள் சீமானிடம் கேட்டனர். அப்போது அவர், ''திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் சங்கி என்று கூறி வருகிறார்கள். ஆனால் திமுகவை இப்போது என்னவென்று சொல்வது. 

பாஜகவுக்கு திமுக தான் பி டீம் ஆக செயல்படுகிறது. ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் அப்பா பெயரில் நூறு ரூபாய் நாணயம் வெளியீடு என்ற உடன் பாஜகவுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறீர்கள். இவ்வளவுதான் உங்கள் கோபமா?'' என்று திமுகவை சாடினார். 

தொடர்ந்து பேசிய சீமான், ''ஆளுநர் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்கள். ஆனால் இப்போது ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இருப்பதும் அதே ஆளுநர் தானே. கருணாநிதியின்100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் திமுக பாஜவுடன் கைகோர்த்து இருப்பது சந்தர்ப்பவாத அரசியல். 

இன்று நாணய வெளியீட்டு விழாவில் திமுக பாஜகவை புகழ்வதும், பாஜக திமுகவை புகழ்வது நடக்கும். பாஜகவை பாசிசம் என்று திமுக கூறி வருகிறது. அந்த பாசிசம்தான் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது. இந்த விழாவில் ராகுல் காந்திக்கு திமுக அழைப்பு விடுக்காததற்கு, காங்கிரஸ் கட்சி தலைகுனிய வேண்டும்'' என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow