DMK Protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு... மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

DMK Protest Against BJP Government : மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Jul 27, 2024 - 11:20
Jul 27, 2024 - 12:31
 0
DMK Protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு... மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம்

DMK Protest Against BJP Government : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்துள்ள பாஜகவின் முதல் பட்ஜெட் இது என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற பெயரையே கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.    

இந்நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாகக் கூறி, திமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திமுகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

அப்போது பேசிய தயாநிதிமாறன், சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி ஆப்பு வைத்துள்ளார் என்றார். மேலும், அடுத்த பிறவியில் தமிழினாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்று தேர்தலுக்கு முன்பாக கூறிய கேடி தான் மோடி என காட்டமாகவும் விமர்சித்தார். மத்திய அரசு சந்திரபாபு நாயுடுக்கு 16 ஆயிரம் கோடியை நிதியாக வழங்கவில்லை, கடனாக வழங்கியுள்ளது. ஏமாற்று வேலை செய்து புதிய பூலோகத்தை படைத்துள்ளார் நிர்மலா சீதாராமன். தேர்தலின் போது சென்னையிலும் கோவையிலும் ஜோக்கர் ஆட்டுக்குட்டிக்காக ரோட் ஷோ செய்தார் மோடி. ஆனால் தேர்தலில் பாஜகவிற்க்கு கோவையிலும் நாமம், சென்னையிலும் நாமம். அந்த வகையில் தமிழ்நாட்டில் நடைபெறும் மெட்ரோ பணிக்காக நிதி ஒதுக்குவதிலும் பாஜக நாமம் போட்டுள்ளது. தமிழ்நாடு வலிமையாக இருந்தால்தான் இந்தியா வலிமையாக இருக்கும் தமிழ்நாடுதான் இந்தியாவின் முதுகெலும்பு என பேசினார். 

அவரைத் தொடர்ந்து பேசிய கலாநிதி வீராசாமி, 2 மாநிலங்களின் உதவி இல்லை என்றால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தால், பல ஆயிரம் கோடி நிதியை ஆந்திராவிற்கும் பீகாருக்கும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். அதேபோல், திமுக சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், துணை மேயர் மகேஷ்குமார் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.  

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், ஒன்றிய அரசு நிதி கொடுக்காமல் வஞ்சிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை திமுகவினரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow