திமுக, அதிமுகவுக்கு இதே வேலையா போச்சு.. இருவரும் சளைத்தவர்கள் அல்ல - நீதிபதி காட்டம்

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக  கூறிக் கொண்டு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Nov 16, 2024 - 04:30
 0
திமுக, அதிமுகவுக்கு இதே வேலையா போச்சு.. இருவரும் சளைத்தவர்கள் அல்ல - நீதிபதி காட்டம்

மதுரையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்லூர் ராஜூ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாகவும், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை என்றும் தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாகவும் செல்லூர் ராஜு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

ஆனால் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செல்லூர் ராஜூ பேசியுள்ளதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது 

மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி வேல்முருகன், திமுக ம்ற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்றும் நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை. மாறாக மாறி மாறி இருவரும் குறை சொல்வதே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள் என்று அதிருப்தி தெரிவித்தார்.

 மேலும் சாதனை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை என்றும் இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி,  இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சில் எந்த அவதூறு இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிபதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ஒரு அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டுவதே இன்றைய நிலையாக இருக்கிறது என்று நீதிபதி சுட்டிக் காட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow