அமைச்சர் துரை முருகன் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (ஜன 3) சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அமைச்சர் துரை முருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு, கிடங்கு உள்பட 5 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
அதாவது, தமிழகத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் துரை முருகன் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து பத்து லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் துரை முருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், 11 கோடியே 55 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமலாக்கத் துறையினர் இன்று காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு, கிடங்கு உட்பட ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் துரைமுருகனிடம் வேலூரில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து துரைமுருகன் பேசியதாவது, "இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ அதே அளவுதான் எனக்கும் தெரியும். வீட்டில் வேலையாட்களை தவிர வேறு யாரும் இல்லை. வந்திருக்கும் அதிகாரிகள் யார் என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்த பிறகு நான் கருத்து கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
What's Your Reaction?