சிறைத்துறையில் ஊழல்.. மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Jan 3, 2025 - 12:23
 0
சிறைத்துறையில் ஊழல்..  மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் 6 மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்

சிறைவாசிகள் மறுவாழ்விற்காக சிறைத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறைவாசிகள் மூலமாக எழுதுபொருட்கள், மருத்துவ பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மதுரை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் தயாரிக்கும் பொருட்களில்  போலி ரசீது தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021-ஆம் ஆண்டு புகார் எழுந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

மேலும் இந்த மோசடி புகார் தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களையும்,  மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட ரசீதுகளையும்  ஆய்வு செய்ததில் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மூன்று மத்திய சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்  அரசு துறைகளுக்கு செல்லாமல் அரசுக்கு ஐந்து கோடியே 91 லட்சம்  இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும், சந்தை மதிப்பில் 14 கோடியே 35 லட்சம் மோசடி நடந்திருப்பதாக தணிக்கை துறை தெரிவித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், சிறைக்கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்திலும் மோசடி நடந்துள்ளதாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் 6 மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், வேலூர் சிறைத்துறை நிர்வாகப்பிரிவு தியாகராஜன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow