மதுரையில் தடையை மீறி பேரணி.. குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது
மதுரையில் பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளியான ஞானசேகரன் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்று பல கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக-வினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக போன்ற கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து , தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆளுநரை நேரில் சந்தித்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து இன்று (ஜனவரி 3) பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையிலிருந்து சென்னை வரை நீதிப்பேரணி நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். நீதிப்பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் பாஜக மகளிர் அணித் தலைவர் உமாரதி தலைமையில் பெண்கள் பலர்
மிளகாய் வறலை இடித்து பூசியும், தீச்சட்டி ஏந்தியும் நூதன போராட்டம் நடத்தினர். தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?