சென்னை ஓட்டல் அறையில் தனியார் தொலைக்காட்சி அதிகாரி இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் ரவி சங்கர் சாதுபய் (40). இவர் சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமர்ஷியல் பிரிவு மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4 ஆம் தேதி மும்பை அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள பீ பிஸ் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இந்த நிலையில் இன்று காலை ஓட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கு போன் செய்து பேசி உள்ளார்.
உடல் நிலை சரியில்லாததால் பணிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ரவி சங்கர் சாதுபய் ஓட்டல் அறையிலேயே ஓய்வு எடுத்தார். இன்று மதியம் மகேஷ் ஓட்டல் அறைக்கு வந்து பார்த்தார்.
அறை கதவு திறந்த நிலையில் இருந்த நிலையில், படுக்கையில் ரவி சங்கர் சாதுபய் சுயநினைவின்றி கிடந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அலுவலக ஊழியர் பெரோஸ் ஷெரீப் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மும்பையில் உள்ள இறந்து போன ரவி சங்கர் சாதுபய்யின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.