பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்.. ரூ.1000 வழங்காததால் மக்கள் குமுறல்
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்காதது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பரிசு தொகுப்பு மட்டுமல்லாமல், இலவச வேட்டி- சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டு கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன.
சென்னை திருவல்லிகேணி விக்டோரியா விடுதி பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், வருகிற 9-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பண்டிகை காலங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் அத்தியாவசிய பயன்பாட்டிற்கு உதவியாக இருந்த நிலையில் ஆயிரம் ரூபாய் இந்த ஆண்டு வழங்கப்படாது வருத்தம் அளிப்பதாக வேதனையோடு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி, ஏலக்காய் போன்ற பொருட்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் அந்த பொருட்கள் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வரும் 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் 13-ஆம் தேதிக்குள் பரிசுத்தொகுப்பை மக்களுக்கு கொடுத்து முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?