இலங்கைக்கு கடத்த இருந்த கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்.. இருவர் கைது
சென்னையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிலரை அரும்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவி, கணேசன், மற்றும் திருவள்ளூரை சேர்ந்த மதன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 38 கிலோ போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் ரசாயன மூலக்கூறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், 51 லட்சம் பணம், 105 கிராம் தங்க நகை, 5 செல்போன், 2 பாஸ்போர்ட், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த கும்பல் இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் தனிப்டை போலீஸார் இது தொடர்பாக சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து வெளி நாடுகளுக்கு துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் மூலக்கூறு பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் இந்த கும்பல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து கடந்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீஸார் பெரும்பாக்கத்தில் உள்ள ராஜா வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டு துப்பாக்கி, 79 தோட்டாக்கள், ஒரு லட்சம் கிலோ பிரவுன் மெத்தப்பெட்டமைன் மற்றும் 4 கிலோ போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் ரசாயன பவுடர், கார், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, இந்த கும்பல் யாரிடம் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கினர்? யாரும் மூலம் வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டனர் என்பது குறித்தும், இதில் சர்வேத போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் வீட்டில் கள்ள துப்பாக்கிகள், தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?