ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. இதுதான் காரணம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

Jan 3, 2025 - 15:07
Jan 3, 2025 - 15:35
 0
ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. இதுதான் காரணம்
அப்பாவு-ஆர்.என்.ரவி

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  வரும் 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து அவர் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என்.ரவி,  தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதுடன் தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆளுநர் உரையில் உண்மை தன்மை மற்றும் தார்மிக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாக கூறி உரையை புறக்கணித்தார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி வெறும் மூன்று நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது, மழை வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை. மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 

அதன்பின், அவைமுன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் தீர்மானத்தை வாசிக்க தொடங்கினார். அந்த தீர்மானத்தில், ‘ஆளுநர் ஒப்புதல் வழங்கிய உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற்றப்படும். ஆளுநர் அவையில் பேசியது அவைக்குறிப்பில் நீக்கப்படும்’ என சொல்லப்பட்டிருந்தது. அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இதுமட்டுமல்லாமல், கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போதும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையில் இருந்த சில வரிகளை தவிர்த்துவிட்டு வாசித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow