TVK Vijay: “கெட்டபய சார் அந்த சின்ன பையன்..” தவெக மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாடு, 7 மணிக்கு முடிவுக்கு வந்தது. தனது அம்மா, அப்பா இருவரையும் கட்டியணைத்து ஆசிர்வாதம் பெற்ற விஜய், 6.13 மணிக்கு தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து 45 நிமிடங்கள் பேசிய விஜய், தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி ஸ்டோரி சொல்வது தளபதி விஜய்யின் வழக்கம். அதேபோல், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிலும் குட்டி ஸ்டோரி கூறியது வைரலாகி வருகிறது. “ஒரு நாட்டில் பெரிய போர் வந்தது... பவர் ஃபுல்லான தலைமை இல்லாததால் பச்சப்புள்ள கையில் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதனால் அந்த நாட்டில் இருந்த பெருந்தலைகள் பயத்தில் இருந்தார்களாம். அந்த சின்ன பையன் நாட்டுடைய படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘போர்க்களம் போகலாம்’ என சொன்னான்.
அப்போது அந்த பெருந்தலைகள் ‘நீ சின்ன பையன்’ என்றெல்லாம் சொன்னார்களாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்த பையன், அடுத்து என்ன செய்தான், என்ன நடந்தது என சங்க இலக்கியத்தை படித்தவர்களுக்கு தெரியும், தெரியாதவர்கள் படித்தவர்களிடம் கேட்டு தெரிஞ்சிக்கோங்க! ஆனா... கெட்டப் பையன் சார் அந்த சின்ன பையன்!” எனக் கூறினார். அதாவது நான் தான் அந்த சின்ன பையன் என்றும், அரசியலில் வெற்றி வாகை சூடுவான் அந்த கெட்டப் பையன் என்பதாக குறியீடு வைத்தும் விஜய் பேசியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய் சொன்ன இந்த குட்டி ஸ்டோரியை, அக்கட்சியின் தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதேபோல், தவெக கொடி பற்றியும் விஜய் விளக்கம் கொடுத்திருந்தார், அதில் கொடியின் சிவப்பு நிறம், புரட்சி, கட்டுப்பாட்டை குறிக்கிறது; கொடியில் உள்ள வாகைப்பூ வெற்றிக்கான அடையாளம்; கொடியில் உள்ள போர் யானை, மிகப்பெரிய பலத்தை குறிப்பிடுகிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில், மாநாடு முடிந்ததும் திடலில் கூடியிருந்த தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். அதேபோல் வி.சாலை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
What's Your Reaction?