Chennai Rain: சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை... விமான சேவைகள் பாதிப்பு!

Heavy Rain Lashes Chennai Today : சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

Sep 26, 2024 - 10:37
Sep 26, 2024 - 12:13
 0
Chennai Rain: சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை... விமான சேவைகள் பாதிப்பு!
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை

Heavy Rain Lashes Chennai Today : சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் சென்னை முழுக்க மழை வெளுத்து வாங்கியது. இடி, மின்னலுடன் ஆக்ரோஷமாக பெய்த மழையால் சென்னையின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. அதேபோல், சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக சென்னையின் அம்பத்தூர், வானகரத்தில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மலர் காலணியில் 12 சென்டி மீட்டர் மழையும் மணலி, அம்பத்தூரில் 10 சென்டி மீட்டர் மழையும், கேகே நகர், அண்ணாநகர், கத்திவாக்கத்தில் 9 சென்டி மீட்டர் மழையும், கொளத்தூர் கோடம்பாக்கம், புழலில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.  

அதற்கு அடுத்தப்படியாக நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், ராயபுரம், திருவொற்றியூர், பனப்பாக்கம், ஐஸ் ஹவுஸ், மாதவரம், ஆலந்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 7 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. அதேபோல் மதுரவாயில், சோழிங்கநல்லூரில் 6 சென்டி மீட்டர் என்ற அளவில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், அதி கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. பெரம்பூர் பகுதியில் உள்ள முரசொலிமாறன் இரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்பட்டு வருகின்றன. 

ஆவடியில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்து பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பட்டாபிராம் சேக்காடு ரயில்வே கிழ்ப் பாலமானது 12 அடி உயரம் கொண்டது. கனமழை காரணமாக அது தற்போது 6 அடி முழ்கியுள்ளது. மேலும், சாலையில் இருந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடி சுரங்கப்பாதையில் தேங்கும் வண்ணமாக உள்ளது. இதனால் ஆவடி, சேக்காடு, கோபாலபுரம், தென்றல் நகர், கரிமா நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதேபோல் ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமலும், அவசர தேவைக்காக மருத்துவ அவசரங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 350 கனஅடி நீர்வரத்து வரத் தொடங்கியது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1116 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுப்பகுதியில் 3.7 செமீ மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் நேற்றிரவு பெய்த பலத்த கனமழையால் 35 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூரு, மும்பை, விஜயவாடா, கோழிக்கோடு, திருச்சியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow