CM Siddaramaiah Case : சித்தராமையா மீதான MUDA வழக்கு: சிபிஐ விசாரிக்க வேண்டும்.. பாஜக கோரிக்கை!

CM Siddaramaiah MUDA Case : ''முடா வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை நேர்மையாக இருக்காது; அவர்களால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த முடியாது''

Sep 26, 2024 - 15:20
Sep 26, 2024 - 16:24
 0
CM Siddaramaiah Case : சித்தராமையா மீதான MUDA வழக்கு: சிபிஐ விசாரிக்க வேண்டும்.. பாஜக கோரிக்கை!
BJP Demand CBI Investication on CM Siddaramaiah MUDA Case

CM Siddaramaiah MUDA Case : கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவரது மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் (MUDA)கையகப்படுத்தியது. இதற்கு பதிலாக MUDA சார்பில் பார்வதிக்கு மாற்று  நிலம் வழங்கப்பட்டது. 

பார்வதியிடம் இருந்து  கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பை விட, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் அவருக்கு வழங்கிய நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும், அதாவது 14 வீட்டு மனைகள் அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்மூலம் MUDA பலநூறு கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. ஆனால் மனைவிக்கு கொடுத்த நிகரான மதிப்புக்கே,  MUDA நிலம் வழங்கியது என்று சித்தராமையா மறுப்பு தெரிவித்து வந்தார். 

மேலும் கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது மனைவி பார்வதிக்கு வழங்கிய இந்த சொத்துக்கள் குறித்து சித்தராமையா தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.  இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் டி ஜே ஆபிரகாம், சினேகமாயி கிருஷ்ணா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடந்த மாதம் மனு அளித்து இருந்தனர். 

இதனைத் தொடர்ந்து MUDA நில முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தது கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவியுடன் சேர்ந்து பெரும் ஊழலில் ஈடுபட்ட  சித்தராமையா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒருசேர குரல் எழுப்பின. 

ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ’’சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. ஆளுநர் சட்டப்படியே தனது அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த வழக்கில் முழுமையான, சுதந்திரமான விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆகவே ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. சித்தராமையா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’என்று கூறியது. 

தொடர்ந்து, முடா வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லோக் ஆயுக்தா போலீசாருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. முறைகேடு வழக்கில் சிக்கிய சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

இந்நிலையில், முடா வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கூறிய கர்நாடக பாஜக தலைவர் பி ஒய் விஜயேந்திரர், ’’முடா வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை நேர்மையாக இருக்காது; அவர்களால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த முடியாது. ஆகவே இந்த வழக்கு விசாரணை நேர்மையாக, வெளிப்படையாக நடைபெற சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 

மேலும் சித்தராமையாவும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சித்தராமையா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். ஆகவே சித்தராமையா இப்போது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow