MUDA வழக்கு.. கைவிரிவித்த உயர்நீதிமன்றம்.. சித்தராமையா பதவிக்கு ஆபத்து?
Muda Corruption Case : ''நமது அரசியலைப்பு சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதியில் நீதியே வெல்லும். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?'' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
Muda Corruption Case : கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவரது மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் (MUDA)கையகப்படுத்தியது. இதற்கு பதிலாக MUDA சார்பில் பார்வதிக்கு மாற்று நிலம் வழங்கப்பட்டது.
பார்வதியிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பை விட, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் அவருக்கு வழங்கிய நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும், அதாவது 14 வீட்டு மனைகள் அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்மூலம் MUDA பலநூறு கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. ஆனால் மனைவிக்கு கொடுத்த நிகரான மதிப்புக்கே, MUDA நிலம் வழங்கியது என்று சித்தராமையா மறுப்பு தெரிவித்து வந்தார்.
மேலும் கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது மனைவி பார்வதிக்கு வழங்கிய இந்த சொத்துக்கள் குறித்து சித்தராமையா தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் டி ஜே ஆபிரகாம், சினேகமாயி கிருஷ்ணா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடந்த மாதம் மனு அளித்து இருந்தனர். மேலும் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நேரில் வலியுறுத்தி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து MUDA நில முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தது கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவியுடன் சேர்ந்து பெரும் ஊழலில் ஈடுபட்ட சித்தராமையா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒருசேர குரல் எழுப்பின.
ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சித்தராமையா, ''என் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்தது சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ராஜினாமா செய்யும் அளவுக்கும் நான் எந்த தவறும் செய்யவில்லை’’என்று கூறியிருந்தார். மேலும் தன் மீது வழக்கு தொடர அனுமதித்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் சித்தராமையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம் நாகபிரசன்னா, கர்நாடக ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய மறுத்ததுடன் சித்தராமையாவின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி எம் நாகபிரசன்னா தனது உத்தரவில், ’’சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. ஆளுநர் சட்டப்படியே தனது அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த வழக்கில் முழுமையான, சுதந்திரமான விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
ஆகவே ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனுதாரரின் (சித்தராமையா) மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’என்று கூறியுள்ளார். சித்தராமையா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து சித்தராமையாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் விரக்தி அடைந்த சித்தராமையா, ’’நமது அரசியலைப்பு சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதியில் நீதியே வெல்லும். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? ஹெச் டி குமாரசாமி ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றபோது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாரா? இது விசாரணையின் ஆரம்பக்கட்டம் தான். நான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன்.
மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்’’என்று கூறியுள்ளார். MUDA வழக்கு சித்தராமையாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ள நிலையில், கர்நாடகா அமைச்சரவையின் அவரச ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?