Tirupati Laddu : சர்ச்சைக்கு மத்தியிலும் திருப்பதி லட்டுக்கு குறையாத மவுசு.. 4 நாளில் இவ்வளவு லட்டுகள் விற்பனையா?

Tirupati Laddu Sales : என்னதான் தொடர் சர்ச்சை கருத்துகள் நிலவி வந்தாலும், ’பக்தர்களிடம் எப்போதும் நான் தான் கிங்கு’என்று கூறுவதுபோல் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகின்றன திருப்பதி லட்டுகள். ஆம்.. திருப்பதி லட்டுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்று கடந்த 4 நாட்களில் லட்டுகளின் விற்பனை விவரம் நமக்கு பறைசாற்றுகிறது.

Sep 24, 2024 - 22:01
Sep 25, 2024 - 14:58
 0
Tirupati Laddu : சர்ச்சைக்கு மத்தியிலும் திருப்பதி லட்டுக்கு குறையாத மவுசு.. 4 நாளில் இவ்வளவு லட்டுகள் விற்பனையா?
Tirupati Laddus Sales

Tirupati Laddu Sales : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இங்கு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. அசாத்திய சுவைக்காக சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கி வருகின்றன திருப்பதி லட்டுகள். ஆனால் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் லட்டுகள் ஹாட் டாபிக் ஆக உள்ளன. 

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதை உறுதிப்படுத்தும்விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஒரு ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது. 

இந்த செய்தி அறிந்ததும் அனைத்து அரசியல் கட்சிகளும் கொதித்தெழுந்துள்ளன. திருப்பதி கோயிலின் புனிதத் தன்மையை களங்கப்படுத்தியவர்கள் மீதும், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது மட்டுமின்றி சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மத்தியிலும் லட்டு பேசும்பொருளாகியுள்ளது.

என்னதான் தொடர் சர்ச்சை கருத்துகள் நிலவி வந்தாலும், ’பக்தர்களிடம் எப்போதும் நான் தான் கிங்கு’என்று கூறுவதுபோல் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகின்றன திருப்பதி லட்டுகள். ஆம்.. திருப்பதி லட்டுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்று கடந்த 4 நாட்களில் லட்டுகளின் விற்பனை விவரம் நமக்கு பறைசாற்றுகிறது. கடந்த 4 நாளில் மட்டும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் திருப்பதியில் விற்பனையாகியுள்ளன. 

கடந்த 19ம் தேதி 3.59 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 20ம் தேதி 3.17 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதேபோல் கடந்த 21ம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், 22ம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றன. இந்த 4 நாட்களிலும் சராசரியாக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. என்னதான் சர்ச்சைகள் சூழ்ந்து இருந்தாலும், திருப்பதி ஏழுமலையான் மீதும், லட்டுகள் மீதும் பக்தர்களுக்கு இருக்கும் அன்பு அதிகரித்து இருப்பதையே இது காட்டுவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow