"ஒரே ஒரு சிறிய உளி, சுத்தியல் போதும்"..... அரசியல் கட்சித் தலைவரிடம் கைவரிசை!

கடைகளில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோவாட் கொள்ளையன் துப்பாக்கி முனையில் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Oct 8, 2024 - 16:46
 0
"ஒரே ஒரு சிறிய உளி, சுத்தியல் போதும்"..... அரசியல் கட்சித் தலைவரிடம் கைவரிசை!
ஒரே ஒரு சிறிய உளி, சுத்தியல் போதும்"..... அரசியல் கட்சித் தலைவரிடம் கைவரிசை

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் தமிம் அன்சாரி நடத்தி வரும் சென்னை பிளாசா செல்போன் உதிரி பாகங்கள் கடை மற்றும் அதே கட்சியை சேர்ந்த  மாநில இளைஞரணி செயலாளர்  மன்சூரலிகான் என்பவர் நடத்தி வரும் ஜீனியஸ் ஆண்கள் ஆடைகள் கடையை நடத்தி வருகின்றனர். இவர்களது கடைகளில் கடந்த மார்ச் மாதம் கடையின் சுவரில் துளையிட்டு 60க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஆடைகள் மற்றும் 15 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரண்டு நபர்கள் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் ஒரு நபர் ஹரியானா மாநிலத்தின் மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்களின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் மேவாட் பகுதிக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக தனிப்படையினர் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் இருந்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். செல்போன் சிக்னலை வைத்து நேற்று முன் தினம் அந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாரை சுற்றி வளைத்து பிரச்சனை செய்துள்ளனர். இதையடுத்து துப்பாக்கியை காட்டி குற்றவாளியை அங்கிருந்து பாதுகாப்பாக டெல்லி அழைத்து வந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

இதையடுத்து குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்த இர்பான் கான் (35) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடை ஒன்றில் இதே பாணியில் சுவரில் தலையிட்டு உள்ளே சென்று 200க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறையில் இருக்கும்பொழுது இர்பான் கானுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு கொள்ளையனான முகமது அலி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜாமினில் வெளியே வந்த பிறகு மீண்டும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஜாமினில் வெளியே வந்த இருவரும் திட்டம் தீட்டி குரோம்பேட்டை பகுதியில் உள்ள செல்போன் கடை மற்றும் துணி கடையில் துளையிட்டு திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் கடைகளை குறிவைத்து துளையிட்டு உள்ளே சென்று திருடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இந்த கொள்ளை சம்பவத்திற்கு சிறிய சுத்தியல் மற்றும் சிறிய உளி ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று லாபகமாக திருடிக் கொண்டு தப்பி செல்வதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட இர்பான் கானிடம் இருந்து நான்கு செல்ஃபோன்கள் இரண்டு ஐபாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட மற்ற 54 செல்போன்களையும் முகமது அலி கொண்டு சென்று விட்டதாக இர்பான்கான் தெரிவித்துள்ளார். தற்போது முகமது அலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இர்பான் கான் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow