அரசியல்

திமுகவுக்கு முடிவு... நாட்கள் எண்ணப்படுகிறது... முன்னாள் அமைச்சர் ப.மோகன்!

திமுக ஆட்சி முடிவுக்கு வர நாட்கள் எண்ணப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ப.மோகன் அதிமுக மனித சங்கிலி போராட்டத்தில் பேசியுள்ளார்.

திமுகவுக்கு முடிவு... நாட்கள் எண்ணப்படுகிறது... முன்னாள் அமைச்சர் ப.மோகன்!

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை; ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; திமுகவினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது; ஆளும் திமுகவினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 8.10.2024 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அதிமுக சார்பாக கள்ளக்குறிச்சி நகரம் செயலாளர் பாபு தலைமையில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரை கிலோ மீட்டர் தூரம் வரை கைகளை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் ப.மோகன், ஒன்றிய செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏற்றிக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ப.மோகன், “திமுக ஆட்சியில் மூன்றாண்டு காலம் மக்கள் விரோத செயலைக் கண்டித்து இந்த மனித சங்கிலி நடைபெற்று வருகிறது. இப்படியே மக்கள் விரோத ஆட்சி செயல்பட்டு வருவதால் திமுக ஆட்சி முடிவுக்கு வர நாட்கள் எண்ணப்படுகிறது” என்றார்.