குடும்ப தகராறில் கொடூரம்.. மனைவியை குக்கரில் வேகவைத்த கணவர்
குடும்ப தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவன் குக்கரில் வேகவைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குடும்ப தகராறில் மனைவியை கணவன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வது, கணவனை மனைவி கொலை செய்வது போன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெங்கடேஷ்வரா காலனியில் குருமூர்த்தி என்பவர் தனது மனைவி மாதவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். முன்னாள் ராணுவ வீரரான இவர் அப்பகுதியில் பாதுகாவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவரது மனைவி மாதவி ஜனவரி 16-ஆம் தேதி மாயமாகியுள்ளார். அவர் காணாமல் போனது குறித்து மாதவியின் பெற்றோர் குருமூர்த்தியிடம் கேட்டபோது அவர் முறையான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதவியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்களுக்கு கணவர் குருமூர்த்தி மீது சந்தேகம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் குருமூர்த்தி தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதாவது, கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த குருமூர்த்தி தனது மனைவி மாதவியை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வீட்டின் கழிவறையில் வைத்து மூன்று நாட்களாக துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வைத்து வேகவைத்துள்ளார். வேக வைத்த இந்த உடல் உறுப்புகளை மீர்பேட்டை ஏரியில் வீசியுள்ளார். மீதமுள்ள உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகளை மிக்ஸியில் வைத்து அரைத்து தெருநாய்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
குருமூர்த்தி தனது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு இவ்வாறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குருமூர்த்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குருமூர்த்தியின் வாக்குமூலம் காவல்துறையை கலங்கடித்தது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?