விண்ணில் சதமடிக்கும் இஸ்ரோ... நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்..!
விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ) தற்போது புதிய மைல்கல்லை எட்டவுள்ளது. இஸ்ரோ விண்வெளிக்கு தன்னுடைய ஜிஎஸ்எல்வி – எப் 15 என்ற 100வது ராக்கெட்டை நாளை (ஜன.29) விண்ணில் செலுத்தி சாதனை புரிய உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்சி மையத்தின் ராக்கெட் ஏவுதளம் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. சுழல் வடிவ தீவாக அமைந்துள்ள நிலையில், மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவின் நடுவே அமைந்துள்ள இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, 100வது ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
உலக நாடுகளுக்கு சவால்விடும் வகையில், இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரோ குறிப்பாக நிலவுக்கு அனுப்பிய சந்த்ராயன், மங்கள்யான் விண்கலங்கள் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பலவேறு புதிய பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், தற்போது புதிய தன்னுடைய 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், முதன்முதலாக ஆகஸ்ட் 10, 1979 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தன்னுடைய முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
இந்நிலையில், தனது 100 வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கை கோள்களுடன் வருகின்ற 29ம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படும் நிலையில், அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விண்ணில் ஏவவுள்ள ராக்கெட் மூலம் NVS-02 எனும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரித்த கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட GSLV-F15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்களுடன், பேலோடுகள் மற்றும் சி-பேண்டில் உள்ள பேலோடுகள் ஆகியவை அடங்கும். மேலும், இதன் எடை 2,250 கிலோ மற்றும் இது 3 கிலோவாட் வரை ஆற்றலைக் கையாளும் நிலையில் உள்ளது. காலநிலை, தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் எனவும் பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
What's Your Reaction?