Kolkata Medical Student Murder Case : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ மாணவி படுகொலையில் அவருடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர். இதற்கிடையே ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை சூறையாடியதுடன், மருத்துவர்களையும், காவல்துறையினரையும் தாக்கியது.
இப்படி அடுத்தடுத்த சம்பவங்களால் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மருத்துவ மாணவி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவி படுகொலை செய்யப்படதும் சந்தீப் குமார் கோஷி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷி மற்றும் அந்த மருத்துவமனையின் 4 மருத்துவர்களிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட உள்ளது. இந்த 4 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கொல்கத்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் நடக்கும் பாலியல் சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ''நாடு முழுவதும் தினமும் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி வருவதாக தரவுகள் கூறுகின்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆகவே பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். இதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு 15 நாட்களுக்குள் வழக்குகளுக்கு தீர்ப்பளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.