மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற போவது யார்..? எகிறும் எதிர்பார்ப்பு
மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
மகராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மகராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் மோதின.
இந்நிலையில், இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 227 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 53 தொகுதிகளிலும், மற்றவை எட்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதேபோன்று, ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68 தொகுதிகளிலும், அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஓரிடத்தில் களம் கண்டன. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், காங்கிரஸ் 57 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து, பிஜேபி 23 தொகுதிகளிலும் மற்றவை ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே காங்கிரஸ் அம்மாநிலத்தில் முன்னிலை வகிப்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
What's Your Reaction?