'மெல்ல மெல்லத் தெரிந்து கொள்வீர்கள்'.. பாஜகவுக்கு நிதிஷ்குமார் மறைமுக எச்சரிக்கை?

Bihar CM Nitish Kumar : பீகாருக்கு சிறப்பு நிதி ஓதுக்கியதால் நிதிஷ்குமார் ஒருபக்கம் மகிழ்ச்சியில் இருந்தாலும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டதால் மறுபக்கம் அவர் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Jul 24, 2024 - 16:27
Jul 25, 2024 - 10:07
 0
'மெல்ல மெல்லத் தெரிந்து கொள்வீர்கள்'.. பாஜகவுக்கு நிதிஷ்குமார் மறைமுக எச்சரிக்கை?
Nitish Kumar Unhappy On BJP

Bihar CM Nitish Kumar : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பும், புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு மத்திய அரசு , முதல் மாதம் சம்பளம் வழங்கும் என்ற அறிவிப்பும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோல் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்புக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே வேளையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. குறிப்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ், தமிழ்நாடு என்ற பெயரை கூட உச்சரிக்காததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தாலும், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு நிதி மழை பொழியப்பட்டுள்ளது. அதாவது நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்திற்கு சாலை மற்றும் மேம்பாட்டு பணிக்கு மட்டும் ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவின் போலாவரம் திட்டம், சாலை கட்டுமான பணிகளுக்கும் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசை தாங்கிப்பிடித்து வருவதால் இந்த இரண்டு மாநிலங்களுக்கும் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மத்திய அரசு நிதி மழை பொழிந்ததால் சந்திரபாபு நாயுடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில்,  நிதிஷ்குமார் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், மக்களவை தேர்தல் முடிந்த பின்பு பாஜகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதாக அறிவித்த நிதிஷ்குமார், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கா விட்டால், பாஜகவுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கி கொள்வோம் என்று நிதிஷ்குமார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில்தான் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று அறிவித்த மத்திய அரசு, நிதிஷ்குமாரை குளிர்விப்பதற்காக பட்ஜெட்டில் பீகாருக்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பீகாருக்கு சிறப்பு நிதி ஓதுக்கியதால் நிதிஷ்குமார் ஒருபக்கம் மகிழ்ச்சியில் இருந்தாலும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டதால் மறுபக்கம் அவர் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று பட்ஜெட் முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டோம். பட்ஜெட்டில் பீகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள்'' என்று கடைசியில் பன்ச் வைத்திருந்தார் .

நிதிஷ்குமார் குறிப்பிட்டுள்ள இந்த கடைசி வார்த்தை, பாஜகவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் நிதிஷ்குமார் எப்போது எந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பார்? என்று யாராலும் கணிக்க முடியாது. இதற்கு பல உதாரணங்களை நாம் குறிப்பிடலாம்.  மிக முக்கியமாக பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை முதன் முதலில் ஒருங்கிணைத்ததே நிதிஷ்குமார்தான்.

தேர்தலுக்கு முன்பாக இந்தியா கூட்டணி தலைவர்களிடம், தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டதாகவும், அதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் மறுப்பு தெரித்ததாகவும் தகவல் வெளியானது. அதன்பிறகு நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக கூட்டணிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. நிதிஷ்குமாரின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow