“மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது... சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்” ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் மாதாத்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதன்படி, சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மேலும், பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதம் ஆயிரம் ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. கட்டடக் கழிவுகளை 1 டன் வரை கொட்டினால், 2 ஆயிரம் ரூபாய் அபராதத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை தீவுத்திடலில் 6.59 ஏக்கரில் சாலையோர பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 6 சதவீதம் வரை உயர்த்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்தது. அதேபோல், திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸும் சொத்து வரியை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், சென்னையில் சொத்து வரி மேலும் 6% உயர்வு, மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்து வரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது. மக்களை பாதிக்கும் வகையிலான இந்த சொத்து வரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றிப் பெற்ற திமுக அரசு, மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக்கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்து வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?