“கேப்டன் மக்கள் சொத்து... விஜயகாந்த் நினைவுகளை கொண்டாடலாம்..” லப்பர் பந்து பார்த்து எமோஷனலான பிரேமலதா

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் பாடல்களின், சுவர் ஓவியங்களும் பயன்படுத்தப்பட்டது குறித்து பிரேமலதா எமோஷனலாக பேசியுள்ளார்.

Sep 28, 2024 - 18:00
 0
“கேப்டன் மக்கள் சொத்து... விஜயகாந்த் நினைவுகளை கொண்டாடலாம்..” லப்பர் பந்து பார்த்து எமோஷனலான பிரேமலதா
லப்பர் பந்து - பிரேமலதா விஜகாந்த் நெகிழ்ச்சி

 சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் மட்டுமின்றி, கேப்டன் விஜயகாந்தும் செமயாக ஸ்கோர் செய்திருந்தார். அதாவது லப்பர் பந்து படத்தில் விஜயகாந்தின் ரசிகராக கெத்து பூமாலை என்ற கேரக்டரில் நடித்திருந்தார் அட்டகத்தி தினேஷ்.   

கிரிக்கெட் கிரவுண்டில் தினேஷ் களமிறங்கும் போதெல்லாம், விஜயகாந்தின் “பொட்டு வெச்ச தங்கக் குடம்” என்ற பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு கேப்டனுக்கு கெத்து காட்டியிருந்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. அதேபோல், தினேஷின் பைக்கில் விஜயகாந்த் ஸ்டிக்கர், அவரது வீட்டு சுவரில் விஜயகாந்த் ஆர்ட் என, படம் முழுக்க கேப்டனின் ரெஃபரன்ஸ் அதிகம் இருந்தன. இதனால் தற்போதைய 2கே கிட்ஸும் கேப்டன் விஜயகாந்தை கொண்டாடத் தொடங்கினர். லப்பர் பந்து படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, ஹரிஷ் கல்யாண், தினேஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட படக்குழுவினர், விஜயகாந்தின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர்.

அப்போது அவர்கள் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக பிரேமலதா விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பலரும் லப்பர் பந்து படத்தை பார்த்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், லப்பர் பந்து படம் குறித்தும், அதில் விஜயகாந்த் ரெஃபரன்ஸ் இருந்ததை குறிப்பிட்டும் எமோஷனலாக பேசினார். லப்பர் பந்து படத்தில் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம், பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

முக்கியமாக கேப்டன் விஜயகாந்தை இந்த தலைமுறை ரசிகர்களும் கொண்டாடியதை பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் பயன்படுத்தி இருந்தனர். ஆனால், லப்பர் பந்து படத்தில் அப்படியில்லாமல் ரொம்ப எதார்த்தமாக இருந்தது. லப்பர் பந்து படத்தின் வெற்றியில் விஜயகாந்துக்கும் பங்கு இருப்பது மகிழ்ச்சியே என்றார். முக்கியமாக இனிமேல் கேப்டன் விஜயகாந்த் எங்கள் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானவர் கிடையாது. அவர் பொதுமக்களின் சொத்து, தமிழக மக்கள் அவரது நினைவுகளை கொண்டாடலாம். இதுபோல விஜயகாந்தின் பாடல்களையும் புகைப்படங்களையும் பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனக் கூறினார்.

சில தினங்களுக்கு முன்னர், திரைப்படங்களில் கேப்டன் விஜயகாந்தை ஏஐ முறையில் பயன்படுத்த யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. எங்கள் அனுமதி இல்லாமல் விஜயகாந்தை படங்களில் பயன்படுத்தக் கூடாது என அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன்பின்னரே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட கோட் படக்குழு, பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் சென்று சந்தித்தனர். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் அனுமதி வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் மக்கள் சொத்து என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது, திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow