ENG vs AUS 4th ODI 2024 Match Highlights : இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனிடையே, செப். 24ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருந்தது.
இந்நிலையில், நான்காவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஃபீல்ஃபிங் தேர்வு செய்தது. ஆனால், போட்டி முடிந்ததும் இந்த முடிவிற்கு ஆஸ்திரேலியா வருத்தப்பட்டிருக்க கூடும். இதனையடுத்து, இங்கிலாந்து பேட்டிங்கிற்கு களம் புகுந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் (22) ரன்களிலும், வில் ஜாக்ஸ் (10) ரன்களிலும், பென் டக்கெட் (63) ரன்களிலும் வெளியேறினார். கடந்த போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் இந்த போட்டியில், 58 பந்துகளில் 87 ரன்கள் [11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] எடுத்து ஆடம் ஸம்பா பந்தில் வெளியேறினார்.
தொடர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். ஜேமி ஸ்மித் 39 ரன்கள் (28 பந்துகள்) எடுத்து வெளியேறியபோதும், லியாம் லிவிங்ஸ்டன் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் லிவிங்ஸ்டன் 25 பந்துகளில் 62 ரன்கள் [7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்] எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
பின்னர் 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்தனர். ஆனால், அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் கத்துக்குட்டி அணி போல அடுத்தடுத்து வெளியேறினர்.
மிட்செல் மார்ஷ் 28 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 5 ரன்களிலும், ஜோஷ் இங்க்லிஷ் 8 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களிலும், மார்னஸ் லபுசேன்ஞ் 4 ரன்களிலும், மேக்ஸ்வெல் 2 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா, அடுத்த 58 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது கொடுமையிலும் கொடுமை. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் 2 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.