IPL 2025 : ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா மும்பை இண்டியன்ஸ்?.. மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?

IPL 2025 - Hardik Pandya in Mumbai Indians : 2025ஆம் ஆண்டும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தக்கவைக்க மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Sep 28, 2024 - 14:15
Sep 28, 2024 - 14:47
 0
IPL 2025 : ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா மும்பை இண்டியன்ஸ்?.. மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?
மும்பை இண்டியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்டியா

IPL 2025 - Hardik Pandya in Mumbai Indians : நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மும்பை அணியில் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். இக்கட்டான போட்டிகளில் களமிறங்கி பல வெற்றிகளை தனி நபராக பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால், மும்பை இண்டியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு அடுத்தப்படியாக அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை(Hardik Pandya) எடுத்ததுடன், அந்த அணியின் கேப்டனாகவும் அணி நிர்வாகம் தேர்வு செய்தது. அதற்கேற்றபடி, அணியின் அறிமுக சீசனிலேயே, தன்னை நம்பிய கேப்டனாக நியமித்த குஜராத் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார்.

மேலும், அந்த சீசனில் 4 அரைச்சதங்கள் உட்பட 487 ரன்களைக் குவித்தார். அதேபோல், 2023ம் ஆண்டு சீசனிலும் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இறுதிப்போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவினாலும், பார்வையாளர்களின் அமோக பாராட்டுகளைப் பெற்றார் ஹர்திக் பாண்டியா(Hardik Pandya).

இந்நிலையில், கடந்த ஆண்டு மும்பை இண்டியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை(Hardik Pandya in Mumbai Indians) மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இப்போதுதான் பெரிய சிக்கல் எழுந்தது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் நுழைந்ததும், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்தது. ரோஹித் சர்மா கடந்த 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய 4 சீசன்களில் மும்பை அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்ததும், ஹர்திக் பாண்டியா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மும்பை இண்டியன்ஸ் அணி களமிறங்கும் போதெல்லாம், மும்பை ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்.சி.பி. உடனான போட்டியின் போது, விராட் கோலி ரசிகர்களை சமாதானப் படுத்திய நிகழ்வும் நடைபெற்றது.

2024 சீசனில் ஹர்திக் பாண்டியா(Hardik Pandya) பெரியளவில் சோபிக்காததும் விமர்சனங்களை எழுப்பி இருந்தது. அதே சமயம், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் இறுதிப்போட்டியில், அபாரமாக செயல்பட்ட ஹர்திக் பாண்டிய கடைசி ஓவரை சிறப்பாக வீசியதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில்(IPL 2025 Mega Auction), ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தக்கவைக்க, மும்பை இண்டியன்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாண்டியா தவிர, ஜாஸ்பிரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரையும் தக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2025-ம்(IPL 2025) ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஏலத்தில் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள, இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால், யார், யாரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று மும்பை அணி நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow