டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டாம் லாதம் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரையும், 2ஆவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையிலும், 3ஆவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 05ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
முன்னதாக, வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது. அதே உற்சாகத்தோடும், வெற்றி மனப்பாண்மையிலும் இந்திய அணி களமிறங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இதையும் படிங்க: 3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி
இந்நிலையில், கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து, தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் பெங்களூரில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகா மாநிலத்தின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், விமான நிலைய சர்வீஸ் சாலை, சுரங்கப் பாதைகள் மற்றும் பிரதான சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
பெங்களூரு நகரில் பரவலான மழை அல்லது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பெங்களூரு நகரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் ஏழு நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் படிக்க: வயநாட்டில் போல சென்னையிலும் நடவடிக்கை.. ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை
இதனையடுத்து டாஸ் கூட போடாமல் முதல்நாள் போட்டி முழுமையாக தடைபட்டதை அடுத்து, பிற்பகல் 2.30 மணியளவில் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக இரு அணி கேப்டன்களும் ஒத்துக்கொண்டனர். மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும் முதல்நாள் போட்டியை கைவிட்டனர். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
இப்படித்தான் வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி முதல் நாள் போட்டிக்குப் பிறகு அடுத்த இரண்டு நாட்கள் மழையால் தடைபட்டது. ஆனாலும், அடுத்த இரண்டு நாட்களில் அதிரடியாக ஆடிய இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்கள் குவித்து சாதனைகளைப் படைத்தது.
அதே மாதிரியான மேஜிக் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் நடைபெறும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் மழைபெய்ய வாய்ப்புகள் இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், மற்ற மைதானங்களைப் போல் அல்லாமல் பெங்களூரு சின்னசாமி மைதானம் சர்வதேச தரத்தில் வடிகால் அமைப்புடன் அமைக்கப்பட்டு உள்ளதால், போட்டி முழுமையாக நடைபெறுமா என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
What's Your Reaction?