இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?.. திருப்பதி லட்டு விவகாரத்தில் கொதித்த குஷ்பு

இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 27, 2024 - 11:06
Sep 27, 2024 - 11:09
 0
இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?.. திருப்பதி லட்டு விவகாரத்தில் கொதித்த குஷ்பு
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து குஷ்பு கேள்வி

தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள், சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மக்களிடம் செல்வாக்கு பெற்ற, தனித்துவ சுவை கொண்ட திருப்பதி கோயில் லட்டை யாரும் விரும்பாமல் இருக்க முடியாது.

இதற்கிடையே திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டு உள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது.

இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்திலும் திருப்பதி லட்டுகள் குறித்த பேச்சுதான் உலவி வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை உண்மை என்றால் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முதல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வரை பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருப்பதி லட்டு விவகாரம் இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், திருப்பதி லட்டு விவவாரகத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், இந்து மதத்தை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள குஷ்பு, “திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்பட்டது. நான் கவனித்தது எல்லாம், இந்து மதம் குறிவைக்கப்படும் போதெல்லாம், இதே மனோபாவத்தைக் கொண்டிருக்கிறோம். ஏன் சகோதர்களே? ஒரு குறிப்பிட்ட மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களிடம், நான் கேட்கிறேன், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி இதே மொழியில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? மற்ற மதங்களை குறித்து தவறாகப் பேசுவதை நினைத்தாலும் உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறது.

மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் மதித்து நடப்பதுதான். நீங்கள் பாரபட்சமாக இருக்க முடியாது. நான் இஸ்லாத்தை தொடர்ந்து பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம், ஆனால் நான் இந்து குடும்பத்திற்கு பயந்து நடக்கும் ஒரு பக்தியுள்ள நபரை திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து. எல்லா மதங்களும் எனக்கு ஒன்றுதான்.

இந்து மதத்தை அவமதிப்பதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் ​​கூடாது. எந்த விதமான அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளப்படாது. கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புண்படுத்துகிறது. பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். கடவுள் வெங்கடாஜலபதி பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow