காதலுக்கு இளைஞர் மறுப்பு.. கூகுள் பே-யில் பணம் அனுப்பி அடித்து துவைத்த இளம்பெண்

Youth Attack Lover in Pudukkottai : புதுக்கோட்டையில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை பணம் கொடுத்து ஆட்களை வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sep 28, 2024 - 07:01
Sep 28, 2024 - 12:01
 0
காதலுக்கு இளைஞர் மறுப்பு.. கூகுள் பே-யில் பணம் அனுப்பி அடித்து துவைத்த இளம்பெண்
காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞருக்கு அடி உதை..

Youth Attack Lover in Pudukkottai : புதுக்கோட்டை மாவட்டம் எஸ் குளவாய்பட்டி அருகே உள்ள மாயனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் கார்த்திக் (27). இவர் புதுக்கோட்டை பேராங்குளம் அருகே ஆலங்குடி சாலையில் உள்ள பேக்கரியுடன் செயல்படக்கூடிய காபி ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இதே காபி ஷாப்பில் புதுக்கோட்டை அய்யனார்புரத்தை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்மணியும் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மூன்று நான்கு மாதங்களாக முதலில் கார்த்திக் சந்தியாவை காதலித்ததாக கூறப்படும் நிலையில் அந்த காதலுக்கு சந்தியா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சந்தியா கார்த்திக்கை காதலிக்க சம்மதம் தெரிவித்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கார்த்திக் சந்தியாவை பிரிந்து விடுவதாக கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தியா கார்த்திக்குடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் கார்த்திக் அவரது முடிவில் தெளிவாக இருந்த நிலையில் சந்தியா அவருக்கு உறவு முறையில் சகோதரரான அய்யனார்புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ பத்ம கணபதி (24)  என்பவரிடம் சந்தியா கார்த்திக் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை கூறி. 'என்னை வேண்டாம் என்று தெரிவித்து சென்ற கார்த்திகை, என் கண் முன்பே ஆட்களை வைத்து அடிக்க வேண்டும்' என்று கூறி அதற்கு பணம் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பணம் வேண்டாம் என்று சிவ ஸ்ரீ பத்ம கணபதி கூறிய நிலையில் நான் பணம் தருகிறேன் என்று தெரிவித்து ஜி-பே(G-Pay)  மூலமாக 500 ரூபாய் பிறகு 300 ரூபாய் என பிரித்து இரண்டு தவணையாக பணத்தை சிவஸ்ரீ பத்மகணபதிக்கு சந்தியா அனுப்பி வைத்துள்ளார். மேலும், சம்பவ இடத்தில் சந்தியா இருந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று சிவஸ்ரீ பத்ம கணபதி அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு கார்த்திக் அவரது வீட்டிற்கு சென்றபோது, புதுக்கோட்டை கைக்குறிச்சி அருகே உள்ள அழகாம்பாள்புரம் பகுதியில் வழிமறித்த சிவ ஸ்ரீ பத்ம கணபதி மற்றும் அவரது  நண்பர்கள் என மொத்தம் மூன்று பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடமிருந்த மொபைல் போன் செயின் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இதில் காயமடைந்த கார்த்திக் புதுக்கோட்டை(Pudukkottai) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் இது குறித்து நடத்திய விசாரணையில் கார்த்திக் முதலில் தன்னை தாக்கிய நபர்கள் வழிப்பறி செய்வதற்காக தாக்கியதாக எண்ணியதாகவும் பிறகுதான் சந்தியாவை வேண்டாம் என்று கூறுவாயா என்று கேட்டு அடித்ததாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கார்த்திகை தாக்கிய சிவ ஸ்ரீ பத்ம கணபதி மற்றும் அவரது நண்பர்களான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னமணி, கிரிதரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்ததுடன், செல்போன் சிக்னலை கண்காணித்து, நடத்திய விசாரணையில் சந்தியா என்ற பெண்மணி தான் கார்த்திக்கை பணம் கொடுத்து ஆள் வைத்து அடித்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து கார்த்திக்கை தாக்கிய சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் தற்பொழுது சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்கள் மீது கார்த்திகை தாக்கியுள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், முழுமையான விசாரணைக்குப் பிறது, இந்த வழக்கில் சந்தியாவின் பெயரையும் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை காதலியே பணம் கொடுத்து ஆள் வைத்து தாக்கியதும் காதலன் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவமும் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow