ஆளுநர் சந்திப்பு.. குற்றவாளிகளை திமுக பாதுகாக்கிறது.. குஷ்பு குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை திமுக பிரமுகர்கள் பாதுகாப்பதாக பாஜக தலைவர் குஷ்பு குற்றம்சாட்டினார்.

Jan 4, 2025 - 21:45
 0
ஆளுநர் சந்திப்பு.. குற்றவாளிகளை திமுக பாதுகாக்கிறது.. குஷ்பு குற்றச்சாட்டு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மகளிர் அணியினர் சந்தித்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில்  ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஜன 3) மதுரையில் பாஜக மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தியும், மிளகாய் வற்றல்களை இடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியா அன்புமணி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து  பாஜக மகளிர் அணியினர் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பூ, ராதிகா சரத்குமார், சரஸ்வதி, சசிகலா புஷ்பா, விஜயதாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் குஷ்பு பேசியதாவது, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் எங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்தினோம். ஆளுநரும் எங்கள் கோரிக்கைகளை ஆர்வத்துடன் கேட்டு இந்த வழக்கு தொடர்பாக தரவுகளை நன்கு தெரிந்து இது  தொடர்பாக என்ன செய்ய முடியும் என எங்களுடன் பகிர்ந்து கொண்டார். 

திமுக இந்த வழக்கு தொடர்பாக சரியாக விசாரணை நடத்துவார்களா? என எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. தொடர்ந்து பெண்களுக்கு நடத்தப்படும் அநீதியில் குற்றவாளிகளை திமுக பிரமுகர்கள் பாதுகாத்து வருகின்றனர்.  இதன் காரணமாக தான் வெளிப்படையாக சிபிஐ விசாரணை தேவை என கேட்கிறோம் என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow